இப்படியெல்லாம் விரதம் அனுஷ்டிக்கலாம், தெரியுமா?உபவாசம் - என்றால் என்ன?


உபவாசம் என்பதற்கு 'இறைவனுக்கு அருகில் இருத்தல்' என்று பொருள் சொல்லப்படுகின்றது.


சமஸ்கிருதத்தில் 'உப' என்றால் 'அருகில்' என்று பொருள். 'வாசம்' என்றால் வசித்தல் அல்லது இருத்தல் என்று பொருள்


சில வகை உணவுகள் நம் மூளையை மந்தமாக்கி நம்மை சஞ்சலப்படுத்துகின்றன. எனவே தான் சில நாட்களில் நம் நேரத்தையும், சக்தியையும் அதிகம் வீணாகாமல் தவிர்க்க எளிதில் செரிக்கக் கூடிய உணவை உட்கொண்டோ அல்லது உணவை முற்றிலும் தவிர்த்தோ உண்ணாவிரதம் இருக்கின்றோம்.

புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,


1.உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.


2.தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


3.பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


4.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


5.காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.


6.பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


7.இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


8.மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


9.மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


10.மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


11.கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


12.மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


13.இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


14.ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


15.ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


16.ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


17.ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.


18.ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


19.ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


20.தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.


21.ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.


22.ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.


23.ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.


24.இரு வேளை உணவுடன் உபவாசம்


25.முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.


26.மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.


27.வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.


உண்ணா நோன்பு இருக்கையில் புலன்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.


உண்மையில், உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மையடைகிறது.

உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதியும் சுட்டிக் காட்டுகிறான்.


'லங்கணம் பரம் ஒளஷதம்' என்று நம் முன்னோர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் 'உபவாசம் இருப்பது உடலுக்கு மிகப்பெரிய மருந்து' என்பது தான்.